தன்னை அறைந்த எம்.எல்.ஏவை தாமதிக்காமல் ஒரு பெண் போலீஸ் பதிலுக்கு அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷாகுமாரி வந்திருந்தார்.
அப்போது அப்பகுதியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் குழுமி இருந்ததால் நெரிசல் நிலவியது. கூட்ட நெரிசல் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆஷாகுமாரியை ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஷாகுமாரி, அங்கிருந்த இளம் பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்தார். சிறிதும் தாமதிக்காத அந்த இளம் பெண் காவலர் எம்.எல்.ஏவை பதிலுக்கு அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.