'இதற்குமுன் இப்படி ஒரு பேரழிவு ஏற்பட்டதில்லை' - வருந்திய இமாச்சல பிரதேச முதலமைச்சர்
இமாச்சலத்திலும் உத்தராகண்ட்டிலும் வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இமாசலப் பிரதேசத்தின் தற்போதைய காட்சிகள் கண்ணீரை வரவைக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இமாச்சலில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் மழையால் ஏற்பட்ட மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 70ஐ கடந்துள்ளது. பலரை இன்னும் காணாததால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. சிம்லா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ இடிந்துள்ளன.
மண் சரிவால் 1,200 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெள்ள பகுதிகளில் சிக்கித்தவித்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விமானப்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை என பல்வேறு படையினர் பம்பரமாக சுற்றிச்சுழன்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு இயற்கை சீற்றத்தை தாங்கள் எதிர்கொண்டதில்லை எனக்கூறும் முதலமைச்சர் சுக்விந்தசர் சிங், "மழை ஏற்படுத்திச் சென்றிருக்கும் சீரழிவுகளை சரி செய்வது இமாலயப் பணி. பழைய நிலையை கொண்டு வர ஓராண்டாவது ஆகும்" என்றுள்ளார்.