46வது ஜிஎஸ்டி கவுன்ஸில் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதிரி, பகவத் கிஷன் ராவ், மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கூட்டத்தில் ஜவுளி துறையின் ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக நேற்றைய தினம் மத்திய பட்ஜெட் தொடர்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில் ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி உயர்விற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்திலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதுகுறித்து விரிவாக வலியுறுத்தினார். மேலும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றபின் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ‘ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவெடுக்கப்பட்டிருப்பது தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5%ல் இருந்து 12%ஆக உயர்த்த எதிர்த்ததாலேயே இந்த வரி உயர்வு நிறுத்திவைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமன்றி, ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெற ஜவுளி உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஜிஎஸ்டி வரி உயர்வு நாளை அமலாக இருந்த நிலையில் இன்று அதை தள்ளிவைத்தது ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: நெல்லை: கூகுள் மேப்-ஐ நம்பி லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்