ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 15ம் தேதி சூர்ய நமஸ்காரம் கட்டாயம் என்ற மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜஸ்தானில் அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 15 ஆம் தேதி சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் சார்பாக ஒரு வழக்கும், பொது நல வழக்கொன்றும் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை நேற்று (14.2.2024) விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், இது குறித்து தெரிவிக்கையில், “மனுவை தாக்கல் செய்த அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்ய முடியும்” என்று தெரிவித்து இந்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மதன் திலாவரி, ‘மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 15 ஆம் தேதி (இன்று) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள், கிராம மக்கள் என்று ஆகியோரும் இணைந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் மூலம் உலக சாதனை படைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜாமியத்தின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் வஹீத் கூறுகையில் “இந்துக்கள் சூரியனைக் கடவுளாகப் போற்றுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்கு மேல் வேறு யாரும் இல்லை. இதனாலேயே அதை ஏற்பதில் சிக்கல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மாநில கல்வி அமைச்சர் இது குறித்து தெரிவிக்கையில், “இது நமது உடலின் வலிமையை அதிகரிக்கிறது. ஆகவே இதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துளார்.
இதையடுத்து இவ்வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதுதொடர்பாக AIMIM மாநில பொதுச் செயலாளர் காஷிப் ஜூபேரி தாக்கல் செய்த மற்றொரு மனுவை பிப்ரவரி 20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.