போலியாக ’டேட்டிங் ஆப்’ உருவாக்கி பெண்களின் புகைப்படங்களை வைத்து சுமார் 500 பேர்களிடம் ஏமாற்றியவரை போலீசார் கைது செய்துள் ளனர்.
இணையதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலி ஆப்-கள் மூலம் ஏமாற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. பெங்களூரில் டேட்டிங் ஆப் மூலம், சபலப்படும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் ரெட்டி (29). பெங்களூரில் வசித்துவருகிறார். எம்.டெக் படித்துள்ள அவர், போலியாக டேட்டிங் ஆப் ஒன்றை உருவாக்கினார். இணையதளத்தில் கிடைக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆப்-பில் சேர்த்து, போலி யாக அவர்கள் பெயரில் புரொபைல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதை நம்பி இளைஞர்கள் பலர் அந்த ஆப்-பில் இணைந்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்கு பேடிஎம், பிம், போன்பி ஆகிய ஆப் மூலம் குறிப்பிட்ட பணத்தை அனுப்பச் சொல்வார். பணம் வந்து சேர்ந்த தும் அந்த நபரை பிளாக் செய்துவிடுவார். இப்படி 507 பேரிடம் சுமார் 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியுள்ளார்.
இதில் ஏமாந்த ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் உள்ள நாகரம்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (24) என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, குண்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து சுமன் ரெட்டி கை து செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் ரொக்கம், கார், லேப்டாப், மூன்று செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
போலீஸ் விசாரணையில், சுமன் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தில், ஆறு மாதத்துக்கு முன் இப்படிப்பட்ட ஒரு ஆப் மூலம் ரூ.60 ஆயிரத்தை தான் ஏமாந்ததாகவும் அதனால் தானும் இப்படி ஏமாற்ற முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.