81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக நவம்பர் 13 ஆம் தேதி அதாவது இன்றும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 43 தொகுதிகளுக்கு நடக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவில், 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 685 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 37 லட்சம் பேர் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்கட்ட வாக்குப்பதிவையொட்டி 15,344 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்ப்பட்டுள்ளன. இவற்றில் 1,152 மையங்கள் முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பதற்றமான பகுதிகளில் 200 கம்பெனி பாதுகாப்புப்படைகள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்திற்குள் தேவையற்ற நபர்கள் மற்றும் பொருட்கள் நுழைவதைத் தடுக்க ஒடிசாவை இணைக்கும் மாநில எல்லையில் 24 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு, ஆயுதமேந்திய பணியாளர்கள் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளனர். மயூர்பஞ்ச், கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜார்கண்டுடன் 75 கிலோமீட்டர் எல்லையைக் கொண்டுள்ள சுந்தர்கர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பீகார்-ஜார்க்கண்ட் சிறப்புப் பகுதிக் குழு, ஜார்க்கண்ட் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
அச்சுறுத்தல்கள் இருந்தாலும், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்தபின் அவர் கூறுகையில், “மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்தலை திருவிழா போல் கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் தேர்தலை ஒட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்கப்போகும் அனைத்து வாக்காளர்களும், ஊழல், ஊடுருவல் இல்லாத அமைதியான மற்றும் வளர்ச்சி அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்கு வாக்களியுங்கள். ஜார்க்கண்டில் பழங்குடியினரின் அடையாளத்தைப் பாதுகாக்கவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் தளத்தில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், பாஜக தன்னுடைய நற்பெயரையும், மாநிலத்தின் நற்பெயரையும் கெடுக்கும் நோக்கத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பர பிரச்சாரத்திற்காக செலவழித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“கடந்த 30 நாட்களில் ஜார்க்கண்ட் சௌபால், ராஞ்சி சௌபால் போன்ற பல்வேறு சமூக ஊடக கணக்குகளில் ரூ.72 லட்சம் மதிப்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பக்கங்களின் உள்ளடக்கத்தை நீங்கள் பார்த்தால், அதன் நோக்கம் என்னுடைய மற்றும் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுப்பதும், மதவெறியை பரப்புவதும், மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைப்பதும் மட்டுமே என்பதை புரிந்துகொள்வீர்கள்” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ் - அப் குழுக்களை உருவாக்கி மாநிலம் மற்றும் குடிமக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் 30 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி அமைத்து. ஹேமந்த் சோரன் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.