Chandrayaan 3 | உயரம் குறைக்கப்பட்ட லேண்டர்; அடுத்தடுத்த கட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் இஸ்ரோ!

நேற்று லேண்டர் உயர குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த கட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
chandrayaan 3
chandrayaan 3pt web
Published on

சந்திரயான் விண்கலத்தினுடைய லேண்டரின் உயரம் நிலவின் மேற்பரப்பில் இருந்து நேற்று 113 கிலோ மீட்டருக்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஐந்து நாட்களில் லேண்டரில் உள்ள கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி பூமியிலிருந்து நிலவை நோக்கி அனுப்பப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்தது. இந்நிலையில் நேற்று சந்திரயான் திட்டத்தின் முக்கிய நிகழ்வான உந்துவிசை கலனின் இருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

chandrayaan 3
விறுவிறுப்பான கட்டத்தில் சந்திரயான் 3... "விக்ரம் லேண்டர்" எங்கே..? விஞ்ஞானி விளக்கம்

சந்திரயான் திட்டத்தின் நிலவில் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி, ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியை லேண்டெர் மேற்கொள்ள உள்ள நிலையில் அது நேற்று முதல் தனித்து செயல்பட தொடங்கியது. நிலவின் மேற்பகுதியில் 153×163 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையில் லேண்டர் சுற்றி வந்த நிலையில் அதனுடைய உயரம் குறைக்கும் பணிகள் நேற்று மாலை 3:50 மணிக்கு நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் 113×157 கிலோமீட்டர் வட்டப்பாதைக்கு உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து லேண்டரினுடைய வேகம் மற்றும் உயரம் படிப்படியாக குறைக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு லேண்டரின் உயரம் 30 கிலோமீட்டர் அளவிற்கு குறைக்கப்பட உள்ளது. சந்திரயான் திட்டத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி அதில் உள்ள ரோவர் மூலம் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லேண்டர் மேற்பரப்பில் தரை இறங்கும்போது அதில் உள்ள அறிவியல் ஆய்வு கருவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் லேண்டரின் நகர்வுகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. மேலும் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள ஆண்டனாக்கள், சென்சார்கள், கேமராக்கள் போன்றவை சரியாக செயல்படுகிறதா என்பது குறித்தான சோதனைகளும் தொடர்ச்சியாக இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி, நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்குவதற்கு முக்கியமான சென்சாராக இருக்கும் "நிலவின் இடநிலை தரவு கேமரா" மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகள் தெளிவாகத் தெரிந்தது. அதே போன்று உந்துவிசைக்கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்த போது லேண்டரில் உள்ள பிரதான கேமரா மூலம் எடுக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து லேண்டரில் உள்ள கேமராக்கள், சென்சார்கள் உட்பட பிற ஆய்வுக் கருவிகளின் சோதனையை தொடர்ச்சியாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Chandrayaan-3 --ISRO
Chandrayaan-3 --ISROTwitter

லேண்டரில் உள்ள 9 வகையான சென்சார்கள் மற்றும் 12 ஆண்டானாக்கள் மூலம் லேண்டரின் ஒவ்வொரு நகர்வுகளையும் இஸ்ரோ கண்காணித்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களில் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற உயர குறைப்பு நடவடிக்கை லேண்டரின் முதல் தனித்த செயல்பாடாக பார்க்கப்படுகிறது. இது வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த கட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com