இந்தியா முழுவதும் கோடை வெயில் அனலாக வீசி வரும் நிலையில் பல மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரை 6 மாவட்டங்களில் உள்ள 94 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹப்லாங் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் ஹப்லாங் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
நிலச்சரிவு காரணமாக ஹப்லாங் பகுதியில் சுமார் 80 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் கனமழைக்கு உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநிலத்தில் மறு சீரமைப்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.