ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சுற்றுலாத் தளங்களான குலு, மணாலி, ஆகியவை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காங்ரா, குலு, சம்பா, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. ராவி, பியாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குலு மாவட்டத்தின் டோபி என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 21 பேர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Read Also -> நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி!
Read Also -> இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்!
குலு, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவால் நூற்றுக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது. மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை மாநில அரசு மேற்கொண்ட போதிலும் சேதங்கள் அதிக அளவில் உள்ளதால் மத்திய அரசு உதவ வேண்டும் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே ஓசூரிலிருந்து சுற்றுலாச் சென்ற 21 பேரும், திருச்சியைச் சேர்ந்த 31 மாணவர்கள் உள்பட 41 பேரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.