குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. வதோதரா, தேவபூமி துவாரகா, ஜாம்நகர் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்பான நிகழ்வுகளால் அம்மாநிலத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வதோதராவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் முதலைகள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். விஸ்வாமித்திரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அவை குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி தொடர்ந்து 2வது நாளாக, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலிடம் தொலைபேசி வாயிலாக உரையாடி, வெள்ள நிலவரத்தை கேட்டறிந்துள்ளார். மேலும் நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கனமழை மேலும் தீவிரமடையும் பட்சத்தில், குஜராத்தின் வெள்ள பாதிப்பு மேலும் மோசமாகும் நிலை உருவாகியிருக்கிறது.