பெங்களூரின் சவுடேஸ்வரி வார்டு, எலஹங்கா, வித்யாரண்யபுரா போன்ற வடக்கு பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி வடக்கு பெங்களூரு நகரின் முக்கிய இடம் எலஹங்கா. இப்பகுதி ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ளது.
எங்கே பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சியளிக்கும் நிலையில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததுள்ளது. மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர். எலஹங்கா பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக தொட்ட பொம்மசந்திர பகுதியில் உள்ள ஏரியிலிருந்து தண்ணீர் சுமார் நான்கு அடி அளவுக்கு ஒரே நேரத்தில் வெளியேறியது.
அதுபோல் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ, பேருந்துகள் என 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. தேவனஹள்ளியில் சாலையில் சென்ற கொண்டிருந்த இரண்டு கார்கள் கால்வாயில் பெருக்கெடுத்த தண்ணீரில் அடித்துச் சென்றன. நல்வாய்ப்பாக அந்த காரில் பயணித்த 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பெங்களூரு மாநகர மழைநீர் வடிகால் அமைப்பின் உள்கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாக மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் வெளிப்பாடாக, மாநகரின் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துச் செல்வதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் கேலி செய்து பதிவிட்டு வருகின்றனர்.
தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் இருந்தவர்களை மாநகராட்சி ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.