வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் பல ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. அணைகள் நிரம்பி வழிகின்றன. மண் சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான பாதிப்புகளால் ஆந்திராவில் மட்டும் 9 பேர் இறந்துள்ளனர்.
ஆந்திராவின் பெரு நகரங்களில் ஒன்றான விஜயவாடா மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்திய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளுக்காக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு நிதியாக தலா 3 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டார். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மங்களகிரி பகுதியில் பாதிப்புகளை பார்வையிட்டார்.
தெலங்கானாவிலும் வாரங்கல் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்பு, நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படைகள் விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் ரயில் பாதைகளில் வெள்ளம் தேங்கியதால் 20 ரயில்கள் ரத்து செய்யப்படுதாகவும் 30 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தென்மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை - ஹைதராபாத் சார்மினார், சென்னை - ஜெய்ப்பூர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே ஆந்திரா, தெலங்கானாவில் மேலும் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.