குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஐ தாண்டியுள்ளது. குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால், 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். குஜராத்தில் 122 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் வெள்ளப்பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்ய மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே 5 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.