வரும் நான்கு நாட்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வெப்ப அலை நிலவும். இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் 18 வரை தற்போதைய வெப்ப அலை தொடர வாய்ப்பு உள்ளது. மேலும், உத்தரப்பிரதேசம்,மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வரும் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், " வட மாநிலங்களில் வரும் நாட்களில் இயல்பை விடவும் 3 -5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வரும் 5 நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதைப்போலவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளிலும் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.