நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன.
மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பீட் தொகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆந்திராவில் மணமக்களுக்கு பரிசைக் கொடுத்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் வம்சி. இவர், தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஆந்திராவில் உள்ள கர்னூலின் பெனுமடா கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது மணமக்களை வாழ்த்திவிட்டு, மணமகனுக்கு பரிசுப்பொருளை அளிக்கிறார். அவர் அளித்த பரிசுப்பொருளை மணமகன் பிரித்துப் பார்க்கும் அடுத்த நொடி, வம்சி சரிந்து விழுகிறார்.
உடனே அருகிலிருந்த நபர்கள் அவரைத் தாங்கிப் பிடிக்கின்றனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கார்டியலஜிஸ்ட் மருத்துவர்கள், ”நீரிழிவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டுகள் ஆகியவை இளம் மாரடைப்பு நிகழ்வுகளுக்கு காரணங்களாக உள்ளன” எனத் தெரிவிக்கின்றனர்.