குடியுரிமை திருத்தச் சட்டத்தை Citizen Amendment Act (CAA), மத்திய அரசு கடந்த மார்ச் 11ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தியது. 2014 டிசம்பர் 31க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது. மேலும், இதில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் மற்றும் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த இணையதள பக்கத்தின் மூலம் தகுதியானவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தேவைப்படும் ஒன்பது ஆவணங்களை அட்டவணை 1A பட்டியலிடுகிறது. இவை எதுவும் கிடைக்கவில்லை என்றால், ஒருவருக்கு என்ன தேவை என்று இந்தப் பிரிவு குறிப்பிடவில்லை.
இந்தச் சட்டத்திற்கு ஒருபுறம் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் எதிர்ப்பும் அதிகளவில் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், இந்தச் சட்டத்தைத் தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலதரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அம்மனுக்களில் பொதுவாக, சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், பல தரப்பில் இருந்தும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ”குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விசாரிக்கப்படும். வருகிற 19ஆம்தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு இன்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “ ’விசாரணையில் வழக்கு உள்ளபோது குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது’ என கூறிவிட்டு, தற்போது விதிகளை அமல்படுத்தியுள்ளார்கள்” என்று வாதிடப்பட்டது. அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்க கால அவகாசம் தர அனுமதி அளிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ’’குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளுக்கு எதிரான 236 மனுக்கள் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் 3 மாவட்டங்கள் மற்றும் சில பழங்குடியின பகுதிகள் இந்தச் சட்டங்களில் கீழ் கொண்டுவரப்படவில்லை; அசாம் தொடர்பான மனுக்கள் விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்” என கூறி விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 236 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, அசாம் காங்கிரஸ் தலைவர் தேபப்ரதா சைகியா, NGO சார்பில் Rihai Manch மற்றும் வெறுப்புக்கு எதிரான குடிமக்கள் சங்கம், அசாம் வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் சில சட்ட மாணவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், Debabrata Saikia, Asom Jatiyatabadi Yuba Chatra Parishad, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) உள்ளிட்ட 200 மேற்பட்ட தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதேநேரத்தில், இந்தச் சட்டத்திற்கு எதிராக முதன்முதலில் உச்ச நீதிமன்றத்தை முதலில் நாடிய மாநிலம் கேரளாவாகும். அது, கடந்த 2020ஆம் ஆண்டே, ‘இது இந்திய அரசியலமைப்பு வழங்கிய சமத்துவ உரிமையின் விதிகளுக்கு எதிரானது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 டிசம்பர் 11இல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் மறுநாளே ஒப்புதல் அளித்தார். பின்னர், 2020ஆம் ஆண்டே இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது மத்திய அமல்படுத்தியுள்ளது.