கேரளாவில் கடந்த 24மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வகை கொரோனா தமிழகத்தில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான முடிவு கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
புதிய திரிபான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அச்சப்படும் அளவுக்கு தொற்றின் வீரியம் இல்லை என்று நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் டாக்டர் விகே.பால் தெரிவித்துள்ளார். புதிய திரிபுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை என்ற அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஎன் 1 என்ற புதிய திரிபு கடந்த ஆகஸ்ட் மாதம் Luxembourg-ல் வெளிப்பட்டது. இது சார்ஸ் கோவிட் 2வின் புதிய திரிபாக அறியப்படுகிறது. ஒமிக்ரான் திரிபு வகை கொரோனா பரவி வரும் நிலையில், அதற்காக கூடுதல் தடுப்பூசி எதுவும் செலுத்திக்கொள்ள தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஏதும் செலுத்தத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த வகை கொரோனாவால் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே இருப்பதாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், அதே சமயம் அச்சப்படத் தேவையில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.