நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பள்ளி தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கேரளாவின் காசரகோடு மாவட்டத்தில் உள்ள கினனூரைச் சேர்ந்த பி.ராஜன் நாயர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் (போக்சோ) நீதிமன்றம் ரூ.20,000 அபராதம் விதித்தது. இதுதவிர, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. கேரளாவில் போக்சோ சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்ட முதல் தீர்ப்பு இதுவே ஆகும்.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்று போக்சோ விதிகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
சுள்ளிக்காரா எல்பி பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜன் நாயர், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைசெய்தார்.அக்டோபர் 11ஆம் தேதி ராஜபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் ராஜன் நாயர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராஜன் நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜன் நாயர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் ஜாமீன் வழங்கப்படவில்லை.