ரூ.2 கோடி பெற்றுக்கொண்டதோடு, மாதம் ரூ.10 லட்சம் ரூபாய் மாமுல் தரவேண்டும் என்று சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கேட்டதாக, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கூறினார்.
பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ’பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டியுள்ளார். சிறையில் முறைகேடுகள் நடப்பது புதிதல்ல. இந்த சம்பவம் வெளியே வந்ததும் சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசினேன். அவர்கள் கூறிய தகவல்படி சிறைத்துறைக்கு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் லஞ்சமாக வருவதாக தெரிவித்தனர். சசிகலாவிடம் இருந்து ரூ.2 கோடி பெற்றுக்கொண்டது மட்டுமின்றி, மாதம் ரூ.10 லட்சம் ரூபாய் மாமுல் தரவேண்டும் என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது. லஞ்ச பணத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாகத் தான் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே மோதல் உண்டாகி, பிரச்சினை வெளியே தெரிந்திருக்கிறது. சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியதாக வெளியான தகவலால் கர்நாடக மாநிலத்திற்கு நாடு முழுவதும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.