தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர் கொலை வழக்கு தொடர்பாக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மகளை சிபிஐ கைது செய்துள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சண்டிகரை சேர்ந்தவர் தேசிய துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்து (27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள ஒரு பூங்காவில் உடலில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மிகச் சிறந்த வீரராக அறியப்பட்ட சிப்பி சித்துவின் மரணம் சண்டிகர் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.
இதுகுறித்து சண்டிகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். ஆனால், விசாரணை வெவ்வேறு கட்டங்களை கடந்து சென்றதில், சிப்பி சித்து கொலையில் ஒரு பெண் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போதும் அவரது விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. மேலும், இந்த வழக்கை கிடப்பில் போடும் செயலிலும் போலீஸார் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சித்துவின் பெற்றோர் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மனு அளித்தனர். அதில், "எங்கள் மகனின் கொலை வழக்கில் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற ஒருவரின் மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவருகிறது. ஆனால் அவரை போலீஸார் காப்பாற்ற முயல்கின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த சண்டிகர் நிர்வாகம், சம்பந்தப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றியது.
அதன்படி, 2016-ம் ஆண்டு பிப்வரி மாதம் முதல் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சிப்பி சித்துவின் கொலையில் இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியின் (பொறுப்பு) மகள் கல்யாணி சிங்குக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எதிரான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், இந்த வழக்கில் கொலையாளி குறித்த தகவலை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானத்தை சிபிஐ அறிவித்தது. இதையடுத்து, பலரும் சிபிஐக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவை ஏதும் பெரிய அளவில் வழக்குக்கு உதவவில்லை.
அதன் பின்னரே, கல்யாணி சிங்கை சிபிஐ ரகசியமாக உளவு பார்த்தது. அதில் அவருக்கும், சித்துவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்ததை சிபிஐ கண்டறிந்தது. மேலும், அதற்கான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, அதனையே ஆதாரமாக கொண்டு கல்யாணி சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாகவும், மழுப்பலாகவும் பதிலளித்தார். இதனால் சிபிஐ அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, கல்யாணி சிங்கை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சிப்பி சித்துவும், கல்யாணி சிங்கும் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 2015-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, கல்யாணி சிங்கிடம் பேசுவதை சிப்பி சிங் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாணி சிங், ஆட்களை ஏவி சிப்பி சித்துவை கொலை செய்திருப்பதாக சந்தேக்கிறோம்" என்றார்.