’வெளிநாட்டவர்’ என்று தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட, அசாமை சேர்ந்த கார்கில் வீரருக்கு, கவுகாத்தி உயர்நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியுள்ளது.
அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதால் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கவுகாத்தி, சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்பவர் வெளிநாட்டை (பங்களாதேஷ்) சேர்ந்தவர் என சந்தேகம் இருப்பதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். இதற்காக குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அசாம் எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவரது குடியுரிமை தொடர்பான வழக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாயம் விசாரித்தது. இறுதியில், முகமது சனாவுல்லா வெளிநாட்டுக்காரர்தான் என தீர்ப்பாயம் உறுதி செய்து, தடுப்பு முகாமுக்கு அனுப்பியது. அவர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று ராணுவமும் கைவிரித்துவிட்டது. இருந்தாலும் இது சட்டரீதியான பிரச்னை என்பதால் உதவுவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தடுப்பு முகாமில் சனாவுல்லா அடைக்கப்பட்டதை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் அவர் குடும்பத்தினர், மே மாதம் 23 ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வந்தது. மனுதாரர் சார்பில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கு டன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சையத் புர்ஹானூர் ரகுமான், அமான் வாதுத், சமிம் அகமது ஆகியோர் ஆஜரானார்கள்.
பின்னர் நீதிபதிகள் மனோஜித் புயன், பிரசந்த குமார் தேகா ஆகியோர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சனாவுல்லாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் தடுப்பு முகாமில் இருந்து இன்று விடுவிக்கப்படுகிறார்.