பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து ஹரியானாவின் சிர்சா பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் 38பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். கலவரங்கள் தொடர்பாக அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானை கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்ய வாய்ப்புள்ளதால் முன் ஜாமீன் மனு கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹனிபிரீத் மனு தாக்கல் செய்தார். ஆனால், வன்முறை நடந்தது முதல் தலைமறைவாக உள்ளதாக அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
ஹனிபிரீத் தற்போது டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் ஹரியானா போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், ஹனிபிரீத் அங்கு இல்லாததால் அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.