பல்வேறு சிறப்பம்சங்கள், வரலாற்று சாதனைகள், பாரம்பரிய, கலாசாரங்களை கொண்ட எப்போதும் அசர வைப்பதில் வியப்பூட்டுவதில் தவறாத நாடு இந்தியா. அந்த வகையில், பல்லாயிரக் கணக்கான கிராமங்களை கொண்ட இந்தியாவின் கடைசி கிராமம் எது என்று தெரியுமா?
இதுதான் இந்தியாவின் கடைசி கிராமம் என்பதை குறிக்கும் விதமாக அங்கு இயங்கும் டீக்கடைகளே சாட்சியாக இருக்கும். பொதுவாக கிராம எல்லைகள் பத்தோடு பதினொன்றாகவே காணப்படும். ஆனால் இந்த கிராமம் சுற்றுலா தலமாகவே அறியப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 3,219 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமாக அறியப்படும் மானா பற்றிதான் பார்க்கப்போகிறோம். உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ளதுதான் இந்த மானா கிராமம்.
இது இந்தியா - சீன ஆக்கிரமிப்பு திபெத் எல்லையில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தியாவின் கடைசி கிராமமான மானா. இந்த கிராமத்துக்கு செல்லும் போது இதுதான் நாட்டின் கடைசி கிராமமா என்ற கேள்விக்கு எவரது பதிலையும் எதிர்பார்க்காமல் India's Last Tea Corner , India's Last Coffee Corner போன்ற கடைகளின் போர்டுகளே தெரியப்படுத்திவிடும். டீ, காஃபி கடைகள் மட்டுமல்லாமல் இந்தியாவின் கடைசி மதுக்கடையும் இந்த மானா கிராமத்தில்தான் இருக்கிறதாம்.
பத்ரிநாத் நகரத்திலிருந்து வெறும் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த மானா கிராமத்தில் அதிகபட்சமாக 600 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். மங்கோலிய பழங்குடியினத்தின் கடைசி வம்சமான போடியா மக்கள் ஆவார்கள்.
மானாவில் என்ன பிரபலம்?
எழில் கொஞ்சும் இயற்கையின் அழகை ரசிப்பதை வேறு என்ன பிரபலம் இருந்திட போகிறது. இருப்பினும் மானாவில் உள்ள வசுந்தரா நீர் வீழ்ச்சி, சரஸ்வதி நதியில் இருந்து அலக்நந்தா நதிக்கு பாய்ந்தோடும் நீரை காணலாம்.
இதுபோக சரஸ்வதி நதியின் குறுக்கே இருக்கும் கல் பாலமும் இங்கு பிரசித்தம். ஏனெனில், புராண கதையான மகாபாரத்தில் பாண்டவர்கள் சொர்க்கத்துக்கு செல்லும் போது சரஸ்வதி நதியில் ஐவரில் ஒருவரான பீமன் கல் பாலம் ஒன்றை கட்டியதாக நம்பப்படுகிறது.
மேலும், இங்கு வியாஸ் குகை ஒன்றும் இருக்கிறது. இந்த குகையில் இருந்தபடிதான் வேத வியாசர் மகாபாரத கதையை எழுதினார் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆன்மிக பயணம் மேற்கொள்வோரை தாண்டை ட்ரெக்கிங் போன்ற சாகச பயணம் செய்வோரும் ஏற்ற கிராமம்தான் இந்த மானா.
மானாவுக்கு செல்ல ஏற்ற சமயம் எது?
மே முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரை மானா கிராமத்துக்கு விசிட் அடிக்க தகுந்த நேரமாக இருக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் காலகட்டத்தில் அதிகபடியான பனிப்பொழிவு இருப்பதால் அப்போது மட்டும் இந்த மானா கிராமம் செயல்படாது. அந்த சமயத்தில் மட்டும் மானா மக்களும் சாமோலி கிராமத்திற்கு இடம்பெயர்ந்துவிடுவார்கள்.