கொரோனாவை தடுக்க தடுப்பூசி தந்து உதவியதற்காகவும், உக்ரைனில் இருந்து மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா நன்றி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹஸீனா, இந்தியா தான் எப்போதும் வங்கதேசத்திற்கு நம்பிக்கையான நண்பன் என புகழாரம் சூட்டினார். 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியாவின் பங்களிப்பை வங்க தேசத்தவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், 1975ஆம் ஆண்டு குடும்பத்தினரை இழந்து தவித்தபோது அப்போதைய இந்திய பிரதமர் தமக்கு அடைக்கலம் கொடுத்தார் என்றும் ஷேக் ஹஸீனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தியா எங்களது அண்டை நாடு. இரு நாட்டுக்கும் இடையே வலுவான நட்புறவு நீடிக்கிறது. சிறு, சிறு பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொண்டிருக்கிறோம் என கூறியஷேக் ஹஸீனா, இந்தியாவும், சீனாவும் சண்டையிட்டு கொள்ளக்கூடாது என தெரிவித்தார். அண்டை நாடுகளுக்குள் பிரச்னை ஏற்பட்டால், பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்றும் ஷேக் ஹஸீனா வலியுறுத்தினார். வங்கதேசம் மதச்சார்புள்ள நாடாக இருந்தாலும், சிறுபான்மையினர் தாக்கப்படும்போதெல்லாம் இரும்புக்கரம் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'நித்யானந்தா உயிருக்கு ஆபத்து.. புகலிடம் கொடுங்கள்' இலங்கையிடம் உதவி கேட்ட கைலாசா அமைச்சர்