நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதா என்பது குறித்து தேசிய நிலஅளவை பதிவேடுகள் துறை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
உலகின் உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. கடல்மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர்கள் (29,028 அடி) உயரம் கொண்டது. இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பூமிக்கு அடியில் சில அடிகள் புதைந்திருக்கலாம் என்ற அறிவியல் அறிஞர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க தேசிய நிலஅளவை பதிவேடுகள் துறை முடிவு செய்துள்ளதாக, அதன் தலைவர் ஸ்வர்ண சுப்பாராவ் ஹைதராபாத்தில் தெரிவித்தார். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுஅளவீடு செய்வது பூமியின் அடித்தட்டு நகர்தல் உள்ளிட்ட அறிவியல்ரீதியான ஆய்வுகளுக்கும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.