ஹரியானாவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் மகேஷ்வ ராவ் பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது என்னைத் திருமணம்செய்த நபர், எனது அம்மாவிடம் ரூபாய் 4 லட்சம் கொடுத்தார். ஆனால், அப்போது அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பின்பு, என்னைத் திருமணம்செய்து அழைத்துவந்து தவறான விஷயங்களைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ’உன் அம்மாவே உன்னை ரூ.4 லட்சத்துக்கு விற்றுவிட்டார்’ என மிரட்டுகிறார். அடித்து கொடுமைப்படுத்துகிறார். நான் அவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) மனோஜ் அவஸ்தி, அந்தப் பெண் தங்களை அணுகி, ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டு, அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிலுவால் காவல் நிலைய எஸ்ஹோ சஞ்சய் மிஸ்ரா, “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம். அந்த பெண்ணினுடைய இரண்டு சகோதரிகளையும் ஹரியானாவில்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளார்கள்.
மேலும், இந்த பெண்ணின் குற்றச்சாட்டுக்கு அவரது தாயும் குடும்ப உறுப்பினர்களும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். எனினும், நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம்!