ஹரியானாவில் தனது ஐந்து குழந்தைகளை கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சஃபிடோன் கிராமத்தை சேர்ந்தவர் ஜும்மா. 38 வயதான அவர் கூலி தொழிலாளி. அண்மையில் ஹரியானா மாநில போலீசார் அவரது இரண்டு பெண் குழந்தைகளை அவர் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் ஜும்மா தனது ஐந்து குழந்தைகளையும் கடந்த நான்கு ஆண்டுகளில் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அவரது மனைவி தற்போது ஆறாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
இது குறித்து ஜிந்த் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அஜித் சிங் தெரிவித்தபோது “கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜும்மா தனது இரண்டு பெண் குழந்தைகளை காணவில்லை என உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதனையடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். 20ஆம் தேதியன்று ஜும்மாவின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த சமயத்தில் ஜும்மா மிகவும் விரக்தியோடு காணப்பட்டதால் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை.
தொடர்ந்து உள்ளூரில் இருந்த கிராம மக்களிடம் விசாரித்தோம். அதில் ஜும்மாவின் மூன்று குழந்தைகள் ஏற்கெனவே மர்மமான முறையில் இறந்திருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. அவை சந்தேகங்களை அவர் மீது ஏற்படுத்தின.
உடனடியாக ஜும்மாவிடம் விசாரித்ததில் இரண்டு மகன் மற்றும் மூன்று மகள்கள் என தனக்கு பிறந்த ஐந்து குழந்தைகளையும் அவர் கொன்றதாக ஒப்புக்கொண்டார். கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து மயங்கிய நிலையில் அவர்கள் இருவரையும் கால்வாயில் வீசியுள்ளார். அவரது மனைவியிடம் விசாரிக்க முற்பட்டோம். ஆனால் அவருக்கும் அவர் போதை மருந்து கொடுத்துள்ளதை அறிந்து கொண்டோம். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறோம்” என்றார்.