“பொங்கலோ பொங்கல்” கூறிய ஹரியானா முதல்வர் - வைரல் வீடியோ

“பொங்கலோ பொங்கல்” கூறிய ஹரியானா முதல்வர் - வைரல் வீடியோ
“பொங்கலோ பொங்கல்” கூறிய ஹரியானா முதல்வர் - வைரல் வீடியோ
Published on

ஹரியானா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டார் பொங்கல் கொண்டாட்டத்தில் தமிழில் பேசும் வீடியோ பரவி வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் அரசு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அங்கு வாழும் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இந்தக் கொண்டாட்ட விழாவில் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கலந்துகொண்டார். விழாவில் தமிழில் பேசிய அவர், வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். தான் மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் அடைந்தவுடன் ஒரு பயிற்சியகத்தில் சேர்ந்ததாகவும், 40 ஆண்டுகளாக தமிழ் மொழியை கற்று வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் அங்கு கூடியிருந்த தமிழர்களிடம், “இது உங்கள் வீடு, உங்கள் நாடு. இங்கு உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது” என்றார்.

பின்னர் தமிழில் பேசிய அவர், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற குறளை கூறினார். தொடர்ந்து தமிழில் பேசிய அவர், “பொதுமக்களை போற்றும் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் பார்த்தது இல்லை. ஒரு மகா சங்காராந்தியாகவும், துளுவாகவும் பார்க்கிறேன். இந்தத் திருநாளை நமது ஒருமைப்பாட்டையும், விவசாயத்தையும் போற்றும் ஒரு நன்னாளாகவும் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் “பொங்கலோ பொங்கல்” என்று கூறி உரையை முடித்துள்ளார். 

இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழில் பேசும் ஹரியானா முதல்வருக்கு வாழ்த்துக்களையும் பலர் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலத் துணைத்தலைவர் எஸ்.ஜி.சூர்யா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ஹரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டார் பல தமிழக தலைவர்களைவிட நன்றாக தமிழை பேசுகிறார் அல்லவா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com