நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்துவருகிறது. அதில் ஏற்பட்ட ஒரு சலசலப்பால், ஹரியானா அரசியல் களமே தீப்பற்றி எரிகிறது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...
ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி கடந்த 2019 முதல் நடந்து வருகிறது. பாஜக ஆட்சி நடந்து வந்தாலும், கூட்டணி கட்சிகளின் உதவியுடனே (குறிப்பாக ஜே.ஜே.பி எனும் ஜனநாயக ஜனதா கட்சி [Jannayak Janta Party] உதவியுடன்) அந்த ஆட்சி நடந்து வந்தது.
மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை என்பது 46 என்றுள்ளது. ஹரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 40 இடங்களிலும், சுயேச்சை 7 இடங்களிலும், ஜேஜேபி கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. தனிப்பெரும்பான்மையாக பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காததால், ஜேஜேபி மற்றும் சுயேச்சைகளுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சி அமைத்தது.
இந்த சூழலில், தற்போது ஜேஜேபி பாஜகவுடனான தனது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறது. ஜே.ஜே.பி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மக்களவை சீட் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் கட்டர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் சுயேச்சை வாக்குகள் 7 பேருடன் கூட்டணி வைத்து நிச்சயம் ஆட்சியை அமைப்போம் என்று பாஜக கூறியுள்ளது. அப்படி இன்றைய தினமே மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது பாஜக என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியானது 31 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. பாஜகவில் இருந்து விலகிய ஜேஜேபி காங்கிரஸ் உடன் இணைந்தாலும் அவர்களுக்கு 41 எம்எல்ஏக்கள்தான் இருப்பர். பெரும்பான்மைக்கு காங்கிரஸுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டனர். ஒருவேளை அப்படியேதும் நிகழுமோ என்று அங்கு அரசியல் குழப்பம் நிலவியது. இதனால் சுயேட்சை 7 பேருடன் பிற பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அதன்முடிவில் சுயேட்சைக்களின் ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக ஆட்சியே மீண்டும் அமைகிறது என்பது உறுதியாகியுள்ளது. புதிய முதல்வராக பாஜக-வின் நயாப் சைனி என்பவர் ஆட்சியமைக்கிறார்.
ஹரியானா சட்டமன்ற கட்சித் தலைவராக நயாப் சைனி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க இன்று மாலை அவர் உரிமைக் கோர உள்ளார்.