எதிர்பார்த்ததை காட்டிலும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி சத்தமே இல்லாமே வேலை பார்த்துள்ளது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை.
ஆனால், தற்போது வரையிலான தேர்தல் முடிவுகளை பார்க்கையில் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வருகிறது. பாஜக 39, காங்கிரஸ் 30 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ், பாஜக தலா 9 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற நிலையே உள்ளது. அதனால், கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க வேண்டிய நிலை இரு கட்சிகளுக்கும் உருவாகியுள்ளது.
அதனால், பாஜக, காங்கிரஸ் இருதரப்பினரின் கண்களும் ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜேஜேபி) பக்கம் திரும்பியுள்ளது. சுமார் 12 இடங்களில் அந்தக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா பாஜக தலைவர் சுபாஷையே ஜேஜேபி கட்சி வேட்பாளர் வீழ்த்தியுள்ளார். அதனால், ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முனைப்பில் பாஜக காங்கிரஸ் இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுபோன்ற முக்கியமான தருணங்கள் பலவற்றில் ஏற்கனவே கோட்டைவிட்டுள்ளது. அதாவது, தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாமல் ஆட்சியை பாஜகவிடம் கோட்டைவிட்ட கதை கடந்த காலங்களில் மேகாலயா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் இழுபறி நிலை வந்தபோது, சற்றே விழித்துக் கொண்டு மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி அமைத்த போதும், மீண்டும் பாஜகவிடம் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்.
இத்தகைய நிலையில்தான் ஹரியானாவில் தற்போது இழுபறியான நிலை நீடித்து வருகிறது. இருகட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க 10க்கும் அதிகமான இடங்கள் தேவைப்படுகின்றன. அதனால், முதலில் யார் ஜனநாயக ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைக்கிறார்களோ அந்தக் கட்சிக்குதான் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஹூடாவிடம் அனைத்து பொறுப்புகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டன. தேர்தல் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு ஏற்கனவே தன்னுடைய திறமையை அவர் காட்டிவிட்டார். கூட்டணியையும் சிறப்பாக அமைத்து முடித்தால் அவர் மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆவது உறுதியாகிவிடும்.
இதனிடையே, ஜனநாயக ஜனதா கட்சி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் என அறிவித்துள்ளது. நாளைய கூட்டத்தில்தான் யாருக்கு ஆதரவு என்பதை அந்தக் கட்சி அறிவிக்கக் கூடும். அதற்கும் பாஜக, காங்கிரஸ் இரண்டில் எந்தக் கட்சி அரசியலில் சரியாக காய் நகர்த்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.