ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மற்றும் தயாரிப்பு பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் உலகளவில் பிரபலமான பிரண்டாக விளங்குகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் பவால் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான் இந்நிறுவனம் தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது, இந்தியாவில் தனது வணிக மாதிரியை மாற்றி வருவதாகவும், 'தி ரிவைர்' என்ற தனது வியாபார யுக்தியின் ஒரு பகுதியாக பெரிய சந்தை மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி இந்நிறுவனத்தின் பவால் தொழிற்சாலை விரைவில் இழுத்து மூடப்படவுள்ளது. அதேநேரம் இந்தியாவில் நிறுவனத்தின் டீலர்கள் ஒப்பந்த கால அடிப்படையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்குவார்கள் எனவும் இந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்கால ஆதரவிற்காக ஹார்லி டேவிட்சன் பிராண்ட் நாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், உதிரிபாகங்கள், மாற்று பாகங்கள் மற்றும் எதிர்கால வாகன சேவைகளில் இந்த பிராண்ட் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவி புரியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.