செப்டம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. எந்த குழந்தையும் எண்ணத்திலும் செயலிலும் சரியான பாதையில் செல்வதற்கு பெற்றோரின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு சம பங்கு ஆசியர்களுக்கும் உண்டு. ஒரு மாணவன் பட்டம்போல் உயரே பறந்து செல்ல வேண்டுமா? இல்லை அந்த பட்டத்தை மேலே பறக்க வைக்க உதவும் நூலாக மட்டும் இருந்தாலும் போதுமா? என்ற அடித்தளத்தை அமைத்து கொடுப்பவர்களும் ஆசிரியர்கள் தான்.தெளிந்த சிந்தனை, சீரிய பார்வை, செயல்களில் அறம், இலட்சிய நோக்கம் கொண்டவனாக ஒருவனை மாற்றும் வலிமையை கொண்டவர்தான் ஆசிரியர்.
மாணவர்களின் அறியாமை என்னும் இருளை போக்கி கல்வி என்னும் அழியா கனியை அவர்களுக்கு கொடுத்து சிந்தையில் சிறந்தவனாக மாற ஒரு ஆசானாக இருந்து செயல்படும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் உலக ஆசிரியர்கள் தினமானது கொண்டாடப்படுகின்றது.
ஏன் செப்டம்பர் 5 ?
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவியேற்று நாட்டின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் பதவியையும் வகித்து ஒரு அறிஞராக, தத்துவவாதியாக, பாரத ரத்னா விருது பெற்ற மரியாதைக்குரிய ஆசிரியரும் சிறந்த அரசியல்வாதியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையே ஆசிரியர் தினமான கொண்டாடுகின்றோம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் 2 ஆவது ஜனாதிபதியாக இவர் பதவியேற்றபோது அவரின் மாணவர்கள் இவரது பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை சிறப்பாக கொண்டாட விரும்புகின்றோம் என்ற அவரிடம் கேட்டபோது சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகாரிக்கும் வகையில் எனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் தான் ஆசிரியர் தினமானது கொண்டாடப்படுகின்றது.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே இவரின் நோக்கமாக இருந்தது. ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு சிறந்த மாணவனை உருவாக்குவதே அவரின் இலட்சியம் அவ்வாறே அவரின் செயல்பாடுகளும் இருந்தன. இப்படி தான் செய்த ஆசிரியர் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தார். இதன் வெளிப்பாடுதான் 1918 இல் அவர் பணியாற்றிய மைசூர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, அவரது மாணவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியை ஏற்பாடு செய்து, ரயில் நிலையம் வரை தங்கள் சிறந்த ஆசிரியரான இவரை இறக்கிவிட அதை இழுத்தனர்.
உங்கள் வாழ்வின் ஆசிரியர் யார்?
நிச்சயம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம் வாழ்க்கையை யே மாறுவதற்கு காரணமான ஆசிரியர்கள் இருப்பார்கள்.பள்ளியிலும், கல்லூரியிலும் நாம் செய்யும் குரும்புத்தனத்தையும் பொறுத்துகொண்டு, நம் பொய் புரட்டுகளை எல்லாம் நம்பி விட்டார் என்று நம்மை பெருமையாக எண்ணிக்கொண்ட தருணங்களை சற்று பின்னோக்கி சென்று பார்த்தால்தான் தெரியும் நம்மவரின் தவறை தெரிந்தும் தெரியாதவர்களாக மன்னித்து இருக்கிறார்கலென்று.
வீட்டைக்காட்டிலும் கல்வி கூடங்களில் தான் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஒரு ஆசானாக மட்டும் அவர்கள் இருந்துவிடாமல் ஒரு தோழனாகவும், தோழியாகவும் இருந்து சின்ன சிறு வயதினிலே சிந்தையை சீரமைத்து வருங்காலம் உன் காலம் என்று அதை நிகழ்காலத்தில் நிகழ்த்திய உணர்த்தும் பெருமையும் ஆசிரியர்களையே சாரும். கல்வித்துறையில் மட்டுமல்ல தனக்கு தொழில் கற்று கொடுத்தவர் என்றெல்லாம்.... ஒவ்வொருவருக்கும் அவரவர் துறையில் ஆசிரியர் இருக்கின்றனர். இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு என்னவென்றால் சமூக கடைமகளை சரிவர செய்யும் சிறந்த மனிதானாக வாழ்வது தான்.
அதேசமயம் ”கல்வி கூடங்களில் சாதி, மத,இனம் என்று எந்த வேறுபாடுகளும் இருக்க கூடாது அனைவரும் சமம் என்ற எண்ணம் எழ வேண்டும்” என்று தான் சீருடையானது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அக்கல்வி கூடங்களையே சாதி கூடங்களாக மாற்றும் சம்பவங்களும் அறங்கேறிதான் வருகின்றது. சாதிகள் என்பது இல்லை அது மனிதனின் உருவாக்கம் தான் என்று ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பசுமரத்தாணியை போல பதிய வைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஒரு ஆசிரியர் நினைத்தால் தன் மாணவனை அனைவரும் மதிப்பவராகவும் மாற்றலாம் மதி இல்லாதவனாகவும் மாற்றலாம். எனவே நாம் அனைவரும் ஒரு வெற்றியை தற்போது பெற்று அனுபவித்து நல்ல இடத்தில் இருக்கின்றோம் என்றால் அதற்கு ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அத்தகைய ஆசான்களை கவுரவிக்கும் நாளாக ஆசிரியர் தினத்தை இன்றும் என்றும் கொண்டாடுவோம்.