2 நாட்கள் பயணமாக வங்கதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு டாக்கா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா. பிரதமர் மோடி 15 மாதங்களுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக இன்று வங்கதேசம் சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் நெருங்கிய தொடர்புகள் இருக்கும் நாட்டுக்கு என்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் அங்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறவுள்ள வங்கதேச தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு புறப்படுதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில் வங்கதேச தேசிய தின கொண்டாட்டம் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜ்புர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாளையும் குறிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் அப்துல் ஹமீதையும் சந்தித்து பேசுவார். பிரதமரின் இரண்டு நாள் பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா கூறினார். பிரதமர் மோடி கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பரில் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து 15 மாதங்களுக்குப் பிறகு அவர் வங்கதேசம் சென்றுள்ளார்.