அல்வார் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் கண்ணெதிரே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மே 7ம் தேதிதான் வழக்குப் பதிவு செய்தனர். ஏப்ரல் 29 மற்றும் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற்றதால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பின்னர் பூதாகரமாக வெடித்தது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. வழக்குப் பதிவு செய்ததில் தாமதம் ஏற்படுத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் காட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ராஜஸ்தான் அரசு மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார். “அல்வார் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, போலீசார் மற்றும் நிர்வாகத்தின் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் முடியும் வரை இந்த சம்பவத்தை ராஜஸ்தான் அரசு மூடி மறைத்துள்ளது. தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்காக அமைதி காக்குமாறு பாதிக்கப்பட்டவர்களையும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தலித்கள் தொடர்பானது மட்டுமல்ல, எல்லா பெண்களுடையதும்தான்” என்றார் மாயாவதி.