ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதை கைவிட்டு, உரிய கவுரவத்துடன் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் ஹஜ் பயணத்துக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை, சிறுபான்மையின பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கு செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரங்கிரஸ் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் விலக்கிக் கொள்ள 2012ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். ஹஜ் மானியத்தால் பயணிகள் பலனடையவில்லை என்றும், விமான நிறுவனங்களே பயன் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.