இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டு மதம் மாறிய கேரள பெண் ஹாதியாவின் தந்தை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் மகள் அகிலா (24). சேலத்தில் படித்து வந்த இவரை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீசில் அசோகன் புகார் செய்தார். ஆட்கொணர்வு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகிய அகிலா,
தான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மதம் மாறியதாகவும், தனது பெயரை ஹாதியா என மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தான் தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
(அசோகன்)
இந்த வழக்கின் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகிய ஹாதியா, ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். லவ் ஜிகாத் எனப்படும் காதல் மூலம் கட்டாயப்படுத்தி தனது மகளை மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் அவரை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் அசோகன் கூறினார்.
இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வந்தது. நாடு முழுவதும் கவனிக்கப்பட்ட வழக்காகவும் மாறியது. இறுதியில் ஹாதியாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இந் நிலையில் அசோகன், பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னி லையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.