உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்து ஆலய சிற்பங்கள் உள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் வாரணாசி நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வாரணாசி நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு தனது ஆய்வு அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு குறித்து வெள்ளிக்கிழமை மதியம் விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
கியான்வாபி மசூதி வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கே சிவலிங்கம், நந்தி, தாமரை உள்ளிட்ட இந்து ஆலய அடையாளங்கள் உள்ளதாக மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உண்மையை கண்டறிய நீதிமன்றம் ஆய்வு குழு அமைத்தது. நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற அமைப்பு இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயத்தில் மசூதியில் தொழுகை நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாரணாசி நீதிமன்றம் அமைத்த குழுவின் தகவல்கள் கசிந்ததாக புகார் வந்ததால், குழுவின் தலைவர் மாற்றப்பட்டார். கியான்வாபி மசூதி வழக்கில் புதிய குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், பழைய குழுவின் தலைவரும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
சிவலிங்கம் கண்டுபிடிக்கபட்டததாக கூறப்படும் இடத்தை பாதுக்காக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இஸ்லாமியர்கள் ஒரு நேரத்தில் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் அங்குள்ள கௌரி ஆலயத்தில் தினசரி வழிபாடு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஓய் சந்திரசுட் அமர்வில் நடைபெற்று வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த இந்த அமர்வு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. அவர்கள் வழிபாடு நடத்த எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது என்றும் அதே நேரத்தில் மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை பாதுகாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது வழக்கில் எதிர்மனுதாரர் தரப்பு, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரினார். ஆனால் மஸ்ஜித் கமிட்டி சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாரணாசி நீதிமன்றத்தில் மசூதியின் வசுகானா சுவர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இன்று இவ்வழக்கை ஒத்திவைத்தால் வாரணாசி நீதிமன்ற வழக்கையும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை நாளை விசாரிக்க உள்ள நிலையில் அதுவரை வாரணாசி நீதிமன்றமும் வழக்கை விசாரிக்கவோ அல்லது வழக்கில் ஏதேனும் உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள மசூதி தொடர்பான வழக்கை விசாரிக்க மதுரா நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள ஈத்கா மசூதி கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரா நகரில் இந்த இடத்தில்தான் கிருஷ்ண பகவான் பிறந்தார் என அந்தப் பகுதி மக்கள் நம்புகின்றனர். மதுரா கிருஷ்ணர் கோயில் அருகில் அமைந்துள்ள மசூதி கோயிலை ஆக்கிரமித்து உள்ளது என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- கணபதி சுப்பிரமணியம்