முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் ஆலோசனையில்லாமல் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க முடியாது என மத்திய உள்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் தனது 161 பிரிவு அதிகாரத்தின் படி விடுதலை செய்யும் முடிவை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உருவானது. தமிழக அரசும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஏழு பேர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆளுநர் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது குறித்து சட்டவல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், முடிவு எடுப்பதற்கான கால அளவு இதுதான் என்று எதுவுமில்லை என்பதால் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநர் மத்திய அரசிடம் ஆலோசனை பெற்றே முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டிலே மத்திய அரசு உள்ளது. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று கூறி தமிழக அரசின் முடிவை ஏற்கனவே மத்திய அரசு எதிர்த்தது.
இந்நிலையில், 7 பேர விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையில்லாமல் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க முடியாது என மத்திய உள்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பிரிவு 435ன் படி மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்யும் கிரிமினல் வழக்குகளில் மத்திய அரசின் ஆலோசனையை பெற்றே மாநில அரசு தண்டனை குறைப்பு, விடுதலை உள்ளிட்ட முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதனால், ‘தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுப்பதற்கு அதனை மத்திய அரசின் ஆலோசனைக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் முடிவு எடுக்க முடியாது’ என உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதான் சரியான சட்ட நிலைப்பாடு என்றும் கருணை மனுக்கள் மத்திய அரசின் மூலமாகவே செல்ல வேண்டும் எனவும் அந்த அதிகாரி கூறினார். இந்த விவகாரத்தில் ‘முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் இது தவறான முன்னுதாரணாமாக ஆகிவிடும்’ என்ற தனது முந்தையை நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை’ என்றும் அந்த அதிகாரி கூறியதாக தெரிகிறது.
Read Also -> யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும்
ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ தலைமையிலான பல்முனை ஒழுங்குமுறை கண்காணிப்பு நிறுவனம் தற்போதும் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்த வழக்கின் விசாரணையே இன்னும் முடியவில்லை என்றும் வழக்கு முடியாத நிலையில் விடுதலை குறித்து எப்படி முடிவு எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ‘இந்த வழக்கில் விசாரணை இன்னும் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள பலரை விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியை கேட்டு ரோகடோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று பல்முனை ஒழுங்குமுறை கண்காணிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
courtesy - times of india