டெல்லியை நெருங்கும் வெட்டுக்கிளிகள் அபாயம் !

டெல்லியை நெருங்கும் வெட்டுக்கிளிகள் அபாயம் !
டெல்லியை நெருங்கும் வெட்டுக்கிளிகள் அபாயம் !
Published on

வட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் அசரடித்த வெட்டுக்கிளிகள் இப்போது டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமை (குர்கான்) நெருங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமல் உலக நாடுகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அடுத்தப் பிரச்னையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த மாதம் ஐ நா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் வேகமாகப் பரவிப் படையெடுத்தது. விவசாயிகளும் அதனை விரட்ட முடியாமல் திணறி வந்தனர். கடந்த சில வாரங்களாக வெட்டுக்கிளிகள் தாக்கம் குறைந்த நிலையில், இப்போது டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தென்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த ஹரியானா மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்து "டைம்ஸ் நவ்" இணையதளம் வெளியிட்ட தகவலின்படி டெல்லி - ஹரியானா மாநிலங்களில் மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதால் வெட்டுக்கிளிகள் தங்களது பாதையை மாற்றியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் டெல்லிக்கு 48 மணி நேரம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த வெட்டுக்கிளிகள் இனி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பாலைவனப் பகுதிகளை நோக்கி திசை திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் மீண்டும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சோமு மாவட்டத்தில் உள்ள ஹஸ்டெடா என்ற கிராமத்தில் நான்காவது முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களைச் சேதப்படுத்தி இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதுடன் வெட்டுக்கிளிகள் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com