ஹரியானாவில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்தபோது, ரயில் மோதியில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமம் மாவட்டத்தில் பசாய் தான்கோட் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை அந்த ரயில் நிலையத்துக்கு வந்த 4 இளைஞர்கள், அங்கிருந்த தண்டவாளதின் மீது பேசிய படியே நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள், அவர்களை தண்டவாளத்தை விட்டு விலகிச் செல்லுமாறு கூறினர். ஆனால், அவர்களின் பேச்சை இளைஞர்கள் கேட்கவில்லை.
தொடர்ந்து அவர்கள், தண்டவாளத்துக்கு நடுவே ஸ்கூட்டரை கொண்டு வந்து அதில் நின்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த ரோஹில்லா - அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதி சென்றது. இதில் அந்த இளைஞர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து விசாரணை நடத்தியதில் ஒருவரின் அடையாளம் மட்டுமே தெரியவந்தது. மற்றவர்கள் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை.
செல்ஃபி மோகத்தால் தாங்கள் எந்த இடத்தில், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறோம் என்பதை கூட மறந்து சில இளைஞர்கள் செய்யும் செயல்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது.