ஆந்திரா - ஓடிசா இடையே கரையை கடந்தது குலாப் புயல்!
வங்கக் கடலில் உருவான குலாப் புயல், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூருக்கு இடையே கரையை கடந்தது. இதனால் கலிங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நள்ளிரவு கலிங்கப்பட்டினம் - கோபால்பூர் இடையே முழுமையாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 6.30 மணி அளவில் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் வட திசையில் புயல் கரையை கடக்க தொடங்கியது. குலாப் புயல் கரையை கந்தபோது 95 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதனையடுத்து சுமார் 9 மணியளவில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.