குஜ்ஜார் உள்ளிட்ட 5 பிரிவினருக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 1 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜஸ்தானின் பரத்பூர், கராலி, டவுசா ஆகிய மாவட்டங்களில் குஜ்ஜார் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் மாநில அரசு பணிகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், குஜ்ஜார் இனத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இடஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் அரசு உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், குஜ்ஜார் உள்ளிட்ட 5 பிரிவினருக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 1 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ராஜஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தானில் இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) பிரிவினருக்கு 50 சதவீதம் வீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது.