மருத்துவப்படிப்பில் சேர நினைப்பவர்களுக்கு நுழைவுத்தேர்வு, கடுமையான பாடம் போன்றவையே சவாலானதாக பார்க்கப்படும் சூழலில், அத்தனைக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டு, எம்.பி.பி.எஸ் மருத்துவப் பணியில் சேர விண்ணப்பித்துள்ளார் குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் கணேஷ் பாரையா. இவரது உயரம் 3 அடிதான் என்றாலும், மருத்துவர் ஆக வேண்டும் என்ற உயர்ந்த தன் கனவை மட்டும் விடாமல், அதன்பின் ஓடியுள்ளார் கணேஷ் பாரையா.
12ம் வகுப்பு முடித்த கையோடு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்த நிலையில், உயரத்தை காரணம் காட்டி, கணேஷ் பாரையாவின் விண்ணப்பத்தை இந்திய மருத்துவ கவுன்சில் நிராகரித்ததாக தெரிகிறது. இதனால், தனது கல்லூரி முதல்வர் உதவியுடன் மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளார் கணேஷ் பாரையா. ஆட்சியரைத் தொடர்ந்து, மாநில அமைச்சரையும் அணுகிய இவர், குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குஜராத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தோல்வியை தழுவிய நிலையில், நம்பிக்கையை தளரவிடாத பாரையா, 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதன்படி, 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த பாரையா, படிப்பை முடித்து தற்போது பயிற்சி மருத்துவராக பாவ்நகர் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.
தனது இந்த பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட கணேஷ் பாரையா,
“12ம் வகுப்பை முடித்தவுடன், நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றேன். இவை அனைத்தையும் முடித்து மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் நிராகரித்துவிட்டது. இந்த உயரத்தில் இருப்பதால், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை என்னால் எளிதாக அணுக முடியாது, சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்குப்பிறகு என்ன செய்யலாம் என, பள்ளி முதல்வர்களிடம் பேசி முடிவெடுத்தேன். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றேன். மருத்துவராக ஆகப்போகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னபோது, அவர்களே சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள். ஆனால், போகப்போக புரிந்துகொண்டனர்” என்றார்.
தொடர்ந்து, “முதன்முதலில் என்னை பார்க்கும் நோயாளிகள் சற்று வியப்புடன் பார்த்தாலும், போகப்போக புரிந்துகொள்கிறார்கள். அவர்களது ஆரம்பகட்ட அணுகுமுறையை நானும் ஏற்கிறேன்.
தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், போகப்போக அவர்கள் மகிழவே செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். ‘நீ உயரமாக இல்லை. உன்னால் முடியாது’ என்று சொன்ன அத்தனை பேரையும், தனது வெற்றியால் வாயடைக்க வைத்துள்ளார் கணேஷ் பாரையா. வாழ்த்துகள் கணேஷ்.