குஜராத் மாநிலம் மோர்பியில் ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் டைல்ஸ் நிறுவனம் ஒன்றை, விபூதி படேல் ராணிபா என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நிலேஷ் தல்சானியா என்னும் 21 வயது இளைஞர், அக்டோபர் 2 அன்று பணியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு, ரூ.12,000 மாதச் சம்பளம் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அவரை, விளக்கம் ஏதுமின்றி அக்டோபர் 18 அன்று பணியிலிருந்து அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. எனினும், தாம் வேலை பார்த்த நாட்களுக்கு சம்பளம் தருவார்கள் என நிலேஷ் காத்திருந்தார். ஆனால், 2 வாரமாகியும் நிறுவனம் அவரை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து நிறுவனத்திடம் போன் மூலம் தகவல் கேட்டும் எந்தப் பதிலும் இல்லையாம். இதையடுத்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி, தன் சகோதரர் மெஹுல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் பவேஷ் படேல் ஆகியோருடன் அந்த நிறுவனத்துக்கு நிலேஷ் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் மூவரையும் ராணிபாவின் சகோதரரான ஓம் படேல், பெல்ட்டால் தாக்கியதாகவும் உதைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் வந்த ராணிபா, அவர்களை நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் தன்னிடம் சம்பளம் கேட்க வந்த நிலேஷை, தன் காலணிகளைக் காட்டி, அதை வாயால் எடுக்க ராணிபா வற்புறுத்தியதாகவும், சம்பளம் கேட்டதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ‘இங்கு உனை எங்காவது கண்டால் கொன்று விடுவேன்’ என ராணிபா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், நிலேஷ் உள்ளிட்டோர் தங்கள் நிறுவனத்துக்கு கொள்ளை அடிக்க வந்ததாகவும், அதுகுறித்து போலீஸில் தெரிவிப்போம் எனவும் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நடந்த விவரங்களை அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ராணிபா, அவரது சகோதரர் ஓம் படேல் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக பரீக்ஷித், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதிபால்சிங் ஜாலா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்ட நிலேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.