இடிந்த பாலம் சீர் செய்யப்படாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிகழ்வு குஜராத்தில் நடைபெறுகிறது.
குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்தில் நைகா மற்றும் பேராய் கிராமங்களுக்கு இடையே ஓடும் ஆற்றைக் கடக்க பாலம் ஒன்று இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இந்தப் பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் முதல், வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை உடைந்த பாலத்தின் ஒரு பகுதியில் மதகுகளை பிடித்தவாறே நடந்து மறு கரைக்கு செல்கிறார்கள்.
பள்ளி மாணவ, மாணவிகளை பெரியவர்கள் கைப்பிடித்து மறுபுறம் செல்ல உதவுகிறார்கள். ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்தே இந்தப் பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு செல்ல முடியாவிட்டால், 10 கிலோமீட்டர் சுற்றிச்செல்ல வேண்டியிருக்கும் என்பது இவர்களின் நிலை. பாலம் இடிந்து 2 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேடா மாவட்ட ஆட்சியர் ஐகே படேலிடம் கேட்டபோது, விரைவில் பாலத்தை கட்டும் பணிகள் நடைபெறும் என்று உறுதி அளித்துள்ளார்.