குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட காரின் உரிமையாளரிடம், நாட்டிலேயே அதிகப்பட்சமாக 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் பதிவு எண் இல்லாத காருக்கு போக்குவரத்து காவல்துறையினர் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதற்கான நோட்டீசுடன் காரின் உரிமையாளர் ரஞ்சித் தேசாய், அபராதம் செலுத்தச் சென்றார். அப்போது, ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், காருக்கு வாழ்நாள் வரி செலுத்தப்படாமல் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதற்காக 16 லட்சம் ரூபாய் அபராதமும், அந்தத் தொகைக்கு வட்டியாக 7 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும், இவை தவிர அபராதமாக 4 லட்சம் ரூபாயும் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர். இந்த வகையில் ரஞ்சித் தேசாயிடம் மொத்தம் 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்ட அதிகப்பட்ச அபராதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.