அறிவியல் தொழில்நுட்பத்தால், உலகமே அசுரவளர்ச்சியில் காணும் வேளையில், போலிகளும் உருவாகி வருவது அச்சத்தைத் தருகிறது. அந்த வகையில் மக்களை எப்படியாவது ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதற்காக எந்த வகையிலும் போலி உருவாக்கப்படுகிறது.
இதற்கு உதாரணமாக கடந்தகாலங்களில் போலியாய் கிரிக்கெட் தொடர் மற்றும் சுங்கச்சாவடி, போலி மருத்துவர், போலி காவலர், போலி அரசு அதிகாரி என போலிகளாய் நடித்தும் நடத்தப்பட்டும் அதன்மூலம் பணம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது குஜராத் மாநிலத்தில் போலியாக ஒரு நீதிமன்றமே நடத்தப்பட்டிருப்பதுதான் போலீசாருக்கே ஷாக்காக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல்துறையினர், ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, இந்த சம்பவத்தில், போலியாய் நீதிமன்றத்தை நடத்திவந்த மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத் நீதிமன்ற நீதிபதி ஹார்திக் தேசாய் அளித்த புகாரின்கீழ் இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பால்டி பகுதியில் உள்ள அரசு நிலத்தின் மீது உரிமை கோரி பப்ஜூஜி தாக்கூர் என்பவர் நகர சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின் போதுதான் இந்த போலி நீதிமன்றம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி நீதிமன்றத்தில், மோரிஸ் ஒரு நீதிபதியாகச் செயல்பட்டு, 2019ஆம் ஆண்டு அரசு நிலத்தின் ஒரு பகுதியின் சரியான உரிமையாளர் பப்ஜூஜி தாக்கூர் என்று உரிமைகோரல் வழக்கில் தீர்ப்பளித்திருந்ததன் நகலை, சிவில் நீதிமன்றத்தில் பப்ஜூஜி தாக்கல் செய்தபோதுதான், இப்படி ஒரு போலி நீதிமன்றம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார், ”மோரிஸ் தன்னை ஒரு நடுவராகக் கூறி, தனது வாடிக்கையாளர்களுக்கு தவறான உரிமைகோரல் அறிக்கைகளை அளித்துள்ளார். காந்திநகரில் அவர் அமைத்த போலி நீதிமன்றத்தில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி உண்மையான நீதிமன்றத்தைப் போலவே உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்த நீதிமன்றத்தில், அவரே வழக்குகள் தாக்கல் செய்து, உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன்மூலம், மனுதாரர்களை கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களுக்கு போலியான உத்தரவுகள் மூலம் உரிமையாளர்களாக்க முயன்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.