குஜராத் கலவரத்துக்கு பிறகு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசை கவிழ்க்க சதி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா தீசல்வாட் மீது அம்மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்தக் கலவரத்தை தடுக்க அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நரேந்திர மோடி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
இதனிடையே, இந்த வழக்கை தொடுப்பதற்கு பின்னால் இருந்து செயல்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா தீசல்வாட், முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதில் டீஸ்டா தீசல்வாட் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு குஜராத் காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக குஜராத் காவல்துறையின் எஸ்ஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:
குஜராத் கலவரத்துக்கு பிறகு மாநில அரசை கவிழ்க்க மிகப்பெரிய சதியை டீஸ்டா சீதல்வாட் செய்திருக்கிறார். இதற்காக பாஜகவுக்கு எதிரான ஒரு தேசியக் கட்சியிடம் இருந்து சட்டவிரோதமாக அவர் நிதியுதவிகளை பெற்றிருக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் அறிவுறுத்தலின் படி, அப்பாவி மக்களை இந்த வழக்கில் சிக்க வைக்க தீசல்வாட் முயற்சித்துள்ளார்.
குஜராத் கலவரத்துக்கு பிறகு இந்த சதி வேலைகளை செய்வதற்காக அவருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியின் முக்கிய தலைவர்களை தீசல்வாட் சந்தித்து வந்திருக்கிறார். இப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஜாமீன் வழங்கினால், தனக்கு எதிரான ஆதாரங்களை அவர் அழித்துவிடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.டி. தக்கார், மனு மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.