பிரதமரை விமர்சித்த விவகாரம்: எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் கிடைத்த உடன் மீண்டும் கைது

பிரதமரை விமர்சித்த விவகாரம்: எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் கிடைத்த உடன் மீண்டும் கைது
பிரதமரை விமர்சித்த விவகாரம்: எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் கிடைத்த உடன் மீண்டும் கைது
Published on

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அசாம் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இன்று புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ட்வீட் வழக்கில் குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அசாம் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்த நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜிக்னேஷ் மேவானியை கைது செய்ய வந்த அசாமின் பர்பேட்டாவைச் சேர்ந்த போலீசார், அவர் எந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.



அசாமின் கோக்ரஜரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து, குஜராத்தின் பலன்பூரில் அசாம் போலீஸ் குழு முதலில் அவரை கைது செய்தது. இது தொடர்பாக பேசிய  ஜிக்னேஷ் மேவானி, "இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இதை திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். ரோஹித் வெமுலாவுக்குச் செய்தார்கள், சந்திரசேகர் ஆசாத்துக்குச் செய்தார்கள், இப்போது என்னைக் குறிவைக்கிறார்கள்" என்று கூறினார்

41 வயதான ஜிக்னேஷ் மேவானி மீது கிரிமினல் சதி, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான குற்றம், மத உணர்வுகளை தூண்டுதல் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக பேசிய பாஜக தலைவர் அருப் குமார் டே, "மோடியை பிரதமராகப் பெற்ற நாம் அதிர்ஷ்டசாலிகள், மேவானி பிரதமரின் பெயரை சமீபத்திய வன்முறை சம்பவங்களுடன் இணைக்க முயற்சிக்கிறார். அதற்கு பிரதமர் மோடிதான் காரணமா? கோட்சேவை பிரதமர் மோடியின் கடவுள் என்கிறார், அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.



1995-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பனஸ்கந்தாவின் வட்கம் தொகுதியில் இருந்து சுயேட்சை எம்எல்ஏவாக தேர்வான ஜிக்னேஷ் மேவானி, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகக் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com