குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பல்கலைக்கழக சாலையில் உள்ள பகத்சிங்ஜி கார்டனில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு அருகில் 21 வயது இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். குற்றத்தைச் செய்த பிறகு, அவர் தனது தாயின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ” எனப் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது, அருகிலிருந்து இளைஞர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் நிலேஷ் என்பதும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட ஜோதிபென்னுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. பின்னர் கணவரை பிரிந்த ஜோதிபெண், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், ஒரு மாதமாக அவர் மருந்து உட்கொள்வதை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அவரது நிலைமையை மோசமாக்கியுள்ளது. இதனால் மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில்தான் அவர் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார். தாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு போலீசாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர். நிலேஷ் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.